About the Owner


Recent Post

Pages

Dinamalar

Tuesday, February 14, 2012

ஏய்ப்பது தொடரும்!




இரண்டாயிரம் கோடி ரூபாய் வரிஏய்ப்பு, வெளிநாட்டில் இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் கருப்புப் பணம் ரூ. 24.5 லட்சம் கோடி என்றெல்லாம் வரும் செய்திகள் நம்மை மலைக்கச் செய்தாலும், ஏதோ இந்த அளவுக்காவது வெளிப்படையாகப் பேசவும், நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவும் தொடங்கியிருக்கிறார்களே என்பதை நினைத்து ஆறுதல் அடையலாம்.









நாட்டில் நடைபெற்றுள்ள வணிகத்தின் அளவை ஒப்பிட்டுப் பார்த்து, இந்த அளவுக்கு வணிகப் பரிமாற்றம் நடந்துகொண்டிருக்கும்போது, இத்தனை விழுக்காடு லாபம் கிடைத்திருக்கும், இத்தனை விழுக்காடு வரியாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உத்தேசக் கணக்கீட்டின் அடிப்படையில்தான் வருமான வரித் துறையின் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது 5.32 லட்சம் கோடி வரி வசூல் செய்தாக வேண்டும் என்கிற நிலைதான், வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம்.








கடந்த இரு நிதியாண்டுகளில் (2009-10, 2010-11) வரி ஏய்ப்பு செய்துள்ளவர்கள் என்று வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 22.5 கோடி பேர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினராக அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களாகத்தான் இருப்பார்கள் என்று கருதலாம். ஏனென்றால், தொழில் செய்வோர் தங்கள் லாபத்தை மீண்டும் தொழிலில் போட்டு விரிவாக்கம் செய்து, அதற்காகச் சலுகையையும் பெற முடியும். ஆனால், வெறும் சம்பளத்தையும், லஞ்சத்தையும் மட்டுமே வைத்திருப்பவர்கள் செய்யும் முதலீடுகள் மட்டுமே இத்தகைய வெளிப்படையான சேமிப்புகளாக, சொத்துகளாக உருமாறுகின்றன.








இதேபோன்று நிறுவனப் பங்குகளை வாங்கியவர்கள், விற்றவர்கள் ஆகியோர் பட்டியலை எடுத்துக்கொண்டு, அவர்கள் வரி செலுத்தியிருக்கிறார்களா என்பதைக் கணினி மூலமாகவே படுவிரைவில் அறிந்துகொண்டுவிட முடிகிறது.குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் மதிப்பில் வீடு வாங்கியவர்கள் எண்ணிக்கை 6.23 லட்சம் பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏனென்றால், வீடு விற்பனையை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தே ஆக வேண்டும். இதில் பத்திரத்தில் காட்டும் தொகைக்கு அதிகமாகவே கருப்புப் பணத்தை ரொக்கமாகக் கொடுத்திருந்தாலும்கூட, இந்த வர்த்தகப் பரிமாற்றம் நடந்திருப்பதை மறைத்துவிட முடியாது.








ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வங்கி நிரந்தர சேமிப்பில் பணம் போட்டு வைத்திருப்போர் 27.5 லட்சம் பேர். இவ்வாறாக வீடு, வங்கி சேமிப்பு என இரண்டு வகைகளில் மட்டுமே வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறது. இப்போதெல்லாம், வருமான வரி நிரந்தர எண் பல வர்த்தகப் பரிமாற்றங்களுக்கும் முக்கியமாகக் கருதப்படுவதால்தான் இந்த வரிஏய்ப்பும்கூட வருமான வரித்துறைக்குத் தெரியவந்துள்ளது. இது தகவல் தொழில்நுட்பத்தால் வருமான வரித் துறைக்குக் கிடைத்துள்ள வரம் என்றே சொல்லலாம். மனித உழைப்பின் மூலம் இந்த வரிஏய்ப்புகளைக் கண்டறிவது மிகமிகக் கடினம்.








குறிப்பாக, லஞ்சப் பணத்தை ரொக்கமாக வாங்குவோரில் 90 விழுக்காட்டினர் தங்க நகைகளாக மாற்றி விடுகின்றனர். வங்கியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் உங்கள் வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், தங்கத்தை ரூ.10 லட்சத்துக்கு, விரும்பினால் ரசீது இல்லாமல்கூட வாங்கிவிட முடியும். கருப்புப் பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்வோரைத் திருடர்கள் கண்டறிந்துகொள்வது ஒருபுறம் இருக்க, வருமான வரித்துறை கண்டறிய வகை என்ன?








அடுத்ததாக, ரூ.24.5 லட்சம் கோடி ரூபாய் இந்தியக் கருப்புப் பணம் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ உயர் அதிகாரி ஏ.பி.சிங் கூறியுள்ளார். இது புதிதல்ல. 2010-ம் ஆண்டிலேயே, குளோபல் ஃபைனான்ஸியல் இன்டகிரிட்டி என்ற அமைப்பு, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் கருப்புப் பணத்தின் அளவு 462 பில்லியன் டாலர் என்று கணித்து அறிவித்ததுதான். அதைத்தான் இப்போது சிபிஐ உறுதிப்படுத்தியிருக்கிறது.








நமக்குத் தெரிந்த விவரங்களையேதான் இப்போதும் மீண்டும் தெரிவிக்கிறார்கள். ஆனால், இதில் தொழிலதிபர்கள் எத்தனை பேர், அரசியல்வாதிகள் எத்தனை பேர் என்பதுதான் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் புள்ளிவிவரம்.இந்தியப் பணம் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு, மொரிஷியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா செய்துகொண்டுள்ள, இருமுறை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்தான் மிக முக்கியமான காரணம்.








வரி ஏய்ப்பும் சரி, வெளிநாட்டுக்குக் கருப்புப் பணம் கொண்டு செல்லப்படுவதும் சரி, நிச்சயமாக சாதாரணக் குடிமகனோ, ஏன் ஓர் அரசு ஊழியரோ பெரிய அளவில் ஈடுபடக் கூடிய செயல் அல்ல. நிச்சயமாக இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குதான் அதிகமாக இருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.








இதெல்லாம் அரசுக்கோ, நமது நிதித் துறைக்கோ தெரியாமல் நடக்கிறது என்று சொன்னால் அது நம்பும்படியாக இல்லை. உலகப் பணக்காரர்களைப் பட்டியல் இடும் போர்ப்ஸ் பத்திரிகைப் புள்ளிவிவரப்படி 50க்கும் அதிகமான பில்லியனர்கள் உள்ள இந்திய தேசத்தின் சொத்து வரி வசூல் வெறும் 500 கோடி ரூபாய்தான் என்பதிலிருந்தே, அரசுக்குத் தெரிந்தே நடக்கும் வரி ஏய்ப்புதான் இது என்பதுதானே உண்மை.








÷5 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள ஒருவனுக்கும் 30% வருமான வரி. 500 கோடி ரூபாய் வருமானம் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் அதே 30% வருமான வரி என்றால், அது என்ன நியாயம் என்று கேள்வி கேட்கக்கூட நமக்கு ஒரு மக்கள் பிரதிநிதி இல்லாமல் இருக்கும் நிலையில், வரி ஏய்ப்பும் நடக்கும், மக்களை ஏய்ப்பதும் தொடரும்!

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment